பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிப்பு


பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிப்பு
x
திருப்பூர்


காங்கயம் பகுதியில் பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

கரிசல் மண்

கொங்கு மண்டலத்தில் பருத்தி சாகுபடிக்கு பெயர் பெற்ற பகுதியாக காங்கயம் பகுதி விளங்கி வந்தது. கடந்த 20 ஆண்டுகள் முன்பு வரை காங்கயம் அருகே உள்ள சம்பந்தம்பாளையம், வட்டமலை, குள்ளம்பாளையம், புதுப்பாளையம், காரப்பாளையம், குறுக்கபாளையம், எல்லப்பாளையம்புதூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற கரிசல்மண் பூமி அதிகம் என்பதால் பருத்தி விளைச்சலும் அமோகமாக இருந்தது.

காலப்போக்கில் தண்ணீர், கூலியாட்கள் பிரச்சினை, போதிய விலையின்மை, புழுத்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் பருத்தி சாகுபடியை விட்டுவிட்டு சின்னவெங்காயம், மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு மாறினர். இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் பருத்தியில் புழுத்தாக்காதபடி பி.டி.ரகத்தினை அறிமுகம் செய்தனர். தொடக்கத்தில் இதில் அதிக ஆர்வம் காட்டாத விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக காங்கயம் பகுதிகளில் பலநூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

சேமிப்பு கிடங்கு வேண்டும்

இதுபற்றி பருத்தி விவசாயிகள் கூறியதாவது:- கடந்த 20 வருடங்கள் முன்பு வரை இந்தப்பகுதியில் பருத்தி சாகுபடி பல 1000 ஏக்கர் பரப்பில் நடைபெற்று வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் பருத்தியிலிருந்து வேறு பயிர்களுக்கு மாறினோம். இருப்பினும் எங்களைப்போல ஆங்காங்கே ஒரு சில விவசாயிகள் தொடர்ந்து குறைவான அளவிலேயே பருத்தி சாகுபடி செய்து வந்தோம்.

தற்போது ஒரு ஏக்கர் பருத்தி சாகுபடி செய்ய உழவு, விதை, களை எடுத்தல், உரம், பூச்சி மருந்து, பறிப்பு கூலி என ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவாகும்.

அதிகபட்சமாக ஏக்கருக்கு 10-ல் இருந்து 15 குவிண்டால் மகசூல் கிடைக்கும். குவிண்டால் ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையானால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இதற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க வேண்டும். பருத்தி வெடிக்கும் காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டால் விளைச்சல் வெகுவாக சுருங்கிவிடும்.

அரசு பருத்திக்கு விலை நிர்ணயம் செய்வதுடன் அந்தந்த பகுதியில் சேமிப்பு கிடங்கு வசதிகளை செய்து கொடுத்தால் பருத்தி சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கும் என்றார்.


Next Story