தரமற்ற விதையால் பருத்தியில் உதிரும் காய்கள்


தரமற்ற விதையால் பருத்தியில் உதிரும் காய்கள்
x

தரமற்ற விதையால் பருத்தியில் காய்கள் உதிர்வதாகவும், இது குறித்து அதிகாரிகள்ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்


தரமற்ற விதையால் பருத்தியில் காய்கள் உதிர்வதாகவும், இது குறித்து அதிகாரிகள்ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்க்காலை சீரமைப்பு

திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி தாசில்தார்கள், விவசாயிகள் பங்கேற்றனர். மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன்னுசாமி மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆண்டிப்பாளையம் குளம் 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நொய்யல் ஆற்றில் மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில் இருந்து இந்த குளத்துக்கு தண்ணீர் வந்து நிறைந்து வெளியேறி வருகிறது. வாய்க்கால் 1½ கிலோ மீட்டர் தூரம் புதர்மண்டி உள்ளது. இந்த வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.

1,000 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைக்க வாகன வசதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

கால்நடைகளுக்கு தடுப்பூசி

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் வெங்கடாசலம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சேவூர் பகுதியில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். காய் பிடிக்கும் நிலையில் செடியில் இருந்து காய் உதிர்ந்து வருகிறது. தரமற்ற விதைகளால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகளில் உள்ள குறிப்பிட்ட குளம், குட்டைகளில் உரிய அனுமதி பெற்று விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகளுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும்.

தற்போதைய தட்பவெப்பநிலை காரணமாக கால்நடைகளுக்கு திடீரென்று நோய் ஏற்பட்டு இறந்து வருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

மின்மோட்டார் மாயம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அப்புசாமி மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில், 'சொக்கனூர் ஊராட்சியில் காட்டுப்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு அரசு ஓடை புறம்போக்கில் குட்டை உள்ளது. இந்த குட்டையில் நீரை உறிஞ்சுவதற்காக மின் மோட்டார் வைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டாரை இயக்க மின் தேவைக்காக சூரியஒளி தகடும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த குட்டைக்கு அருகே உள்ள தனிநபர் சிலர், ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் மின் மோட்டார், சூரிய ஒளிதகடு ஆகியவற்றையும் அங்கிருந்து மாயமாகியுள்ளது. சிலரின் நிர்பந்தம் காரணமாக அவற்றை எடுத்துச்சென்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்டை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


Related Tags :
Next Story