பருத்தி விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை
குடிமங்கலம் பகுதியில் பருத்தி விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குடிமங்கலம் பகுதியில் பருத்தி விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
பணப்பயிர்களில் முக்கிய இடம் பிடிக்கும் பருத்தி இந்திய பொருளாதாரம், தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. ஏற்றுமதிதுறையில் முக்கிய வர்த்தகம் கொடுக்கும் ஜவுளி துறையின் மூலப்பொருளாக பருத்தி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.
குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த காலங்களில் பருத்தி சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வந்தது. இப்பகுதிகளில் ஏராளமான நூற்பாலைகள் இயங்கி வந்தன. பருத்தி மொத்த கொள்முதல் நிலையமாக திருப்பூர் விளங்கி வந்தது. தற்போது சொட்டு நீர்ப்பாசனம் மூலமாகவும் மானாவாரியாகவும் குறைந்த அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.
புதிய ரகங்கள்
நூல் விலை உயர்வு, குறைந்த அளவு தண்ணீர், அதிக திறன் கொண்ட புதியரக பருத்தி ரகங்கள் உள்ளிட்ட காரணங்களால் தற்போது பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டயம்பாளையம், அடிவள்ளி,விருகல்பட்டி, கொங்கல் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட இலை பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு மழைக்கு முன்பாக நடவு செய்யப்பட்டது.
செடியின் வளர்ச்சி தருணத்தில் போதிய மழை கிடைக்கவில்லை. இயல்பான வளர்ச்சி இல்லாத நிலையில் பூ பிடிக்கும் தருணத்தில் பருவமழை தொடங்கியது. இதனால் பெரும்பாலான பூக்கள் உதிர்ந்தும் பிஞ்சுகளும் போதிய அளவில் பிடிக்கவில்லை.
தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் எஞ்சிய பூக்களும் உதிர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து நல்ல விலை கிடைத்தது ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.