பருத்தி ஏலம்


பருத்தி ஏலம்
x

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.48½ லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதற்கான அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை இடைத்தரகர் இன்றி ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அறுவடை செய்யப்பட்ட பருத்தி பஞ்சு மூட்டைகளை நேற்று முன்தினம் மறைமுக ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

வியாபாரிகள்

இந்த மறைமுக ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்பட உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி பஞ்சுகளை பார்வையிட்டனர். பின்னர் தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர். இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையிலும், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையிலும் ஏலப்பெட்டி திறக்கப்பட்டு வியாபாரிகள் கேட்ட மறைமுக ஏலத்தொகை வாசிக்கப்பட்டது.

இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.8,809-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,509-க்கும் விலை கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,480-க்கு விற்பனையானது. இந்த மறைமுக ஏலத்தில் மொத்தம் ரூ.48½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டது.



Next Story