கும்பகோணத்தில் ரூ.2¾ கோடிக்கு பருத்தி ஏலம்
கும்பகோணத்தில் ரூ.2¾ கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டது.
கும்பகோணத்தில் ரூ.2¾ கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டது.
பருத்தி சாகுபடி
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். தண்ணீர் வரத்தை பொருத்து நெல் சாகுபடி பரப்பளவில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு குறித்த நேரத்தில் அதாவது ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை பயன்படுத்தி விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகிறார்கள்.
டெல்டா முழுவதும் நெல் சாகுபடி பணிகள் விறு,விறுப்பாக நடந்து வருகின்றன. தண்ணீர் வராத கடைமடை பகுதிகளில் மட்டும் நெல் சாகுபடி பணிகள் மந்தமாக உள்ளது. முன்னதாக கோடை பருவத்தையொட்டி விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து இருந்தனர்.
விவசாயிகள் ஆர்வம்
குறைந்த தண்ணீர் தேவை மற்றும் எதிர்பார்த்த மகசூல் ஆகிய காரணங்களால் டெல்டாவில் பருத்தி பயிரிடுவதற்கு விவசாயிகளிடையே ஆர்வம் அதிகமாக உள்ளது.
வழக்கம்போல் இந்த ஆண்டு கோடை காலத்தில் பயிரிடப்பட்ட பருத்தியை விவசாயிகள் அறுவடை செய்து பஞ்சுகளை ஏல முறையில் விற்பனை செய்து வருகிறார்கள்.
ஏலம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் வாரந்தோறும் நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஏலம் நடந்தது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி தலைமையில், மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பருத்தி விவசாயிகள் 4 ஆயிரம் குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர்.
கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம் சேலம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பருத்தியை வாங்கி சென்றனர்.
விலை நிலவரம்
இதில் பருத்தி அதிகபட்சமாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 329-க்கு விலை போனது. குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 499 என விலை நிர்ணயிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு ரூ.2 கோடியே 72 லட்சம் என ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் தெரிவித்தனர்.