ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் கும்பகோணம், சுவாமிமலை, கபிஸ்தலம், திருப்பனந்தாள், சோழபுரம், நாச்சியார்கோவில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பருத்தி சாகுபடி செய்திருந்த விவசாயிகள் 189 லாட்(800 குவிண்டால்) பருத்தியை கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர், செம்பனார்கோவில் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பருத்தி பஞ்சினை பார்வையிட்டு தாங்கள் கேட்ட விலையை எழுதி அதற்கான பெட்டியில் போட்டனர். இந்த மறைமுக ஏலத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.12 ஆயிரத்து 9-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்திற்கும் விலை கேட்கப்பட்டிருந்தது.