ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 4,961 எக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இந்த பருத்தி செடிகள் நன்கு வளர்ந்து வெடித்து தயார் நிலையில் உள்ளன. இதனை அறுவடை செய்து விற்பனை செய்வதற்காக முன்கூட்டியே விற்பனைக்கூடங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. அதன்படி குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. 2 ஆயிரம் குவிண்டால் பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் தஞ்சை, நாகப்பட்டினம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பங்கேற்றனர்.

அதிகபட்சம்

நாகை விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.12,169-க்கும், குறைந்த பட்சமாக ரூ.9,999-க்கும், சராசரியாக ரூ.10,850-க்கும் ஏலம் போனது.கடந்த ஆண்டு நடைபெற்ற மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,186-க்கு ஏலம் போன நிலையில், இந்த ஆண்டு வேளாண் மின்னணு முறையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



Next Story