கோடை மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு
குடவாசல் பகுதியில் கோடை மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு
குடவாசல்:
குடவாசல் வட்டாரத்தை சேர்ந்த அன்னியூர், திருவீழிமிழலை ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தது. இந்த மழையால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வயல்களில் மழை நீர் தேங்கி நின்றது. தண்ணீர் வடியாத நிலையில், சில விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். பல விவசாயிகள் தண்ணீரை வடிகட்ட முடியாமல் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட துணை வேளாண்மை இயக்குனர் விஜயலட்சுமி, மேற்கண்ட பகுதியில் பருத்தி பயிர்களை பார்வையிட்டார். மேலும் மழை நீரால் ஏற்படக்கூடிய வாடல்நோயை கட்டுப்படுத்த உரிய ஆலோசனைகளையும் வழங்கினார். இதேபோல வலங்கைமான் வட்டாரத்திலும் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி வயல்களை அவர் ஆய்வு செய்தார். இதில் குடவாசல், வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் உடம் இருந்தார்.