பருத்தி பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
பருத்தி பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
பருத்தி பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உரமிடும் பணி
தற்போது பருத்தி பயிருக்கு மண் அணைத்து உரங்களை இட்டு வருகிறார்கள். இந்த தருணத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது. சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, தத்துப்பூச்சி மற்றும் மாவுப்பூச்சிகள் அதிக சேதத்தை உண்டு பண்ணுகின்றன.
இளம் பூச்சிகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் பருத்தி இலைகளுக்கு அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் நிறம் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. குறிப்பாக தத்துப்பூச்சி இலைகளின் சாற்றை உறிஞ்சும் போது அதனுடைய உமிழ்நீரில் உள்ள நச்சுக்கள் இலைகளில் ஊடுருவும் போது இலைகள் மஞ்சள் நிறமாகி மேலும் இலைகள் கீழ்நோக்கி குவிந்து திட்டுத்திட்டாக கரிதல் போன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். இதுவே தத்துப்பூச்சி எரிப்பு என்றும் கூறுவார்கள்.
காய்கள் உதிர்ந்து விடும்
சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது இலைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள் உதிர்ந்து விடும். இலை, தண்டு மற்றும் பூக்களில் கருமை நிறமாக இருப்பதை காணமுடியும். இதற்கு காரணம் என்னவென்றால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தேன் போன்ற திரவத்தை சுரக்கும். அதனை சாப்பிடுவதற்காக எறும்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
மேலும் அந்த தேன் போன்ற திரவத்தில் இருந்து கேப்நோடியம் என்ற பூஞ்சானம் வளரும். இது போன்ற கருமை நிறமாக இருப்பதால் இலைகள் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறி பயன்படுத்தவேண்டும்.
மஞ்சள் நிற ஒட்டும் பொறி
அசுவினி மற்றும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்க மஞ்சள் நிற ஒட்டும் பொறியை ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். தாவரப் பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது எப். ஓ. ஆர். எஸ். 25 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்தலாம்.
வெள்ளை ஈக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வெற்றிசீலியம் லெக்கானி என்ற பூஞ்சானத்தை ஒரு எக்டேருக்கு 2.5 கிலோ பயன்படுத்த வேண்டும். செயற்கை பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் புப்ரோபெசின் 1000 மில்லி அல்லது டயபென்தியுரான் 600 கிராம் அல்லது இமிடாக்குளோபிரிட் 100 மில்லி அல்லது தயமீத்தாக்சாம் 100 கிராம் ஒரு எக்டேருக்கு பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.