பருத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை முறையை ரத்து செய்ய கோரி செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விவசாயிள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொறையாறு;
மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை முறையை ரத்து செய்ய கோரி செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விவசாயிள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு இ-நாம் என்று அழைக்கப்படும் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை மூலம் விவசாயிகள் கொண்டு வரும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் 20-ந்தேதி 600- க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.2 கோடியே 96 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள 3 ஆயிரத்து 225 குவின்டால் பருத்தியை விற்பனை செய்தனர்.
ரூ.65 லட்சம்
இதற்கான தொகையை கடந்த 7-ந் தேதிக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பெரும்பாலான விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில் இ-நாம் திட்டத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறால் 60 விவசாயிகளுக்கு சுமார் ரூ. 65 லட்சம் வரவு வைக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பருத்தி ஏலம் சுதந்திர தின விடுமுறையால் நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்த பருத்திக்கான தொகை ரூ. 65 லட்சத்தை கொடுத்த பிறகு ஏலத்தை நடத்தி, பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி பருத்தியை கொள்முதல் செய்ய வந்த வியாபாரிகளை தடுத்து நிறுத்தினா்.
ஆர்ப்பாட்டம்
இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை விவசாயிகள் ஏற்காததால் வியாபாரிகள் திரும்பி சென்றனர். இதனால் பருத்தி ஏலம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் 500 விவசாயிகள் சுமார் 1000 குவிண்டால் பருத்தியை விற்பனை செய்ய முடியாமல் கிடங்கில் பருத்தி மூட்டைகளை வைத்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மாலை பருத்தி பஞ்சு விவசாயிகள் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு வந்து அங்கு உள்ள அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் பணம் கிடைக்காத விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும்., தற்போது குடோனில் உள்ள பருத்தியை வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.