தொடர் மழையால் பருத்தி விவசாயம் பாதிப்பு
தொடர் மழையால் முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
முதுகுளத்தூர்,
தொடர் மழையால் முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தொடர் மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட பருத்தி விவசாயத்தில் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் பருத்தி விவசாயத்தில் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய ஆலங்குளம், கடம்போடை, தேரிருவேலி, பூசேரி, தாழியாரேந்தல், மட்டியாரேந்தல், கீழத்தூவல் உள்ளிட்ட அதிகமான கிராமங்களில் இந்த ஆண்டும் பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த வாரங்களில் முதுகுளத்தூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கோடை மழையால் பருத்தி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது பருத்தி செடிகளில் இருந்து பருத்திப்பஞ்சுகள் வெளியே தெரிந்த நிலையில் தொடர்ந்து பெய்த கோடை மழையால் பருத்திப்பஞ்சுகள் அனைத்தும் அதிக ஈரப்பதத்துடன் இருந்து வருவதால் பருத்தி விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பருத்தி விவசாயம் பாதிப்பு
இதுகுறித்து மல்லல் கிராமத்தை சேர்ந்த விவசாயி லெட்சுமணன் கூறும்போது, பருத்தி விதை தூவப்பட்ட நேரத்தில் மழை பெய்யும் பட்சத்தில் பருத்தி செடிகள் நன்று வேகமாக வளர தொடங்கி விடும். ஆனால் பருத்தி விதை தூவப்பட்ட நேரத்தில் மழையே இல்லாமல் இருந்தது. காசுக்கு தண்ணீர் கொடுத்து தான் பருத்தி செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சி வந்தோம். தற்போது பஞ்சுகள் விளைச்சல் ஆகி வரும்நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் செடிகளில் விழுந்துள்ள பஞ்சுகள் அனைத்தும் மழை நீரில் நனைந்து ஈரமாகிவிட்டன. இதனால் இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டு விட்டது. அதிக ஈரப்பதமாக உள்ளதால் பஞ்சுகளை வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர் என்றார்.
பருவமழை சீசனில் மழையே இல்லாமல் தற்போது தொடர்ந்து பெய்த கோடை மழையால் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் பல கிராமங்களிலும் இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பருவமழை பெய்யாமல் நெல் விவசாயம் ஒருபுறம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பருத்தி விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.