பருத்தி இலைகள் சிவப்பாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்
பருத்தி இலைகள் சிவப்பாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
திட்டச்சேரி:
பருத்தி இலைகள் சிவப்பாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் இந்த ஆண்டு 3 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில பகுதிகளில் பருத்தி பயிரில் இலைகள் சிவந்து முதிரும் பருவம் வருவதற்கு முன்பே உதிர்ந்து விடுகின்றன என்று விவசாயிகள் கவலை தெரிவித்து வந்தனர்.
இதை அறிந்த சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுனர் சந்திரசேகரன், வேளாண்மை இணை இயக்குனர் தேவேந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்கலா, வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திருமருகல் பகுதியில் பருத்தி வயலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளிடம் வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-
உதிர்ந்து விடும்
மெக்னீசியம் சத்து பயிருக்கு கிடைப்பது தடைப்படும்போது செடியின் இலைகள் சிவப்பு நிறமாக மாறி நரம்புகள் மட்டும் பச்சை நிறமாக இருக்கும். இதனால் பருத்தி பிஞ்சுகளுக்கு தேவையான ஊட்டம் கிடைக்காமல் பிஞ்சு மற்றும் இலைகள் முதிரும் பருவம் வருவதற்கு முன்பே உதிர்ந்து விடும்.
இவற்றை நிவர்த்தி செய்வதற்கு பூக்கும் மற்றும் காய்க்கும் நிலையில் உள்ள பருத்தி செடிகளுக்கு இலை வழியாக 0.5 சதவீதம் மெக்னீசியம் சல்பேட் (5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு) மற்றும் 1.0 சதவீதம் யூரியா (10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு) மற்றும் 0.1 சதவீதம் துத்தநாக சல்பேட் (1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு) ஆகிய மூன்றும் சேர்த்து காலை அல்லது மாலை வேளையில் ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்து நிவர்த்தி செய்யலாம்.
மண் பரிசோதனை
மேலும் வருகிற காலங்களில் மண் பரிசோதனை செய்து அதன் மூலம் பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் உரங்கள் இடுவதன் மூலம் பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாடுகளை தவிர்த்து அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் விவசாயிகளிடம் அறிவுறுத்தினர்.