பருத்தி பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது
கும்பகோணம் பகுதியில் பெய்த தொடர் மழையால் பருத்தி பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனா்.
கும்பகோணம்;
கும்பகோணம் பகுதியில் பெய்த தொடர் மழையால் பருத்தி பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனா்.
கோடை சாகுபடி
கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகள் வயல்களில் தேங்கியுள்ள மழை நீரால் சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.கும்பகோணம் பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் அறுவடை முடிந்து ஒரு சில விவசாயிகள் கோடை நடவாக குறுகிய கால நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.பெரும்பாலான விவசாயிகள் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வசதியாக பருத்தி செடிகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் பருத்தி விதைகளை தெளித்து ஜூன் மாத இறுதியில் இருந்து விவசாயிகள் பருத்தி அறுவடை செய்து அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலோ அல்லது தனியாரிடமோ விற்பனை செய்வது வழக்கம்.
விவசாயிகள் வேதனை
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் விவசாயிகள் பருத்தி விதைகளை நடவு செய்து தற்போது செடிகள் வளர்ந்து பூக்கள் மொட்டு விடும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பருத்தி சாகுபடி செய்துள்ள வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது.வயல்களில் தேங்கிய மழை நீரால் பருத்தி செடிகள் அழுகி மொட்டுகள் உதிர்ந்து பருத்தி மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
இது குறித்து பருத்தி சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:-
பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் மற்றும் பராமரிப்பு செலவினங்கள் குறைவு. கோடையின் வறட்சியை தாங்கி வளர்ந்து நல்ல மகசூல் தரக்கூடிய பயிர் என்பதால் விவசாயிகள் கோடை காலத்தில் பருத்தியை தேர்வு செய்து பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டும் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பருத்தி செடியில் மொட்டுக்கள் கருகி கீழே விழுந்து செடிகளும் அழுக தொடங்கியுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற முடியாமல் பெரும் சிரமததுக்குள்ளாகி உள்ளோம்.
அதிகபட்ச விலை
இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை இழப்பு ஏற்படக்கூடும். கடந்த ஆண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைத்ததால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 50 சதவீதத்துக்கு அதிகமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்திருந்தனர். ஆனால் தொடர் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு பருத்தியின் தரம் குறைந்து விடும் என்பதால் இந்த ஆண்டு பருத்திக்கு அதிகபட்ச விலை கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.