தொடர் மழையால் அழுகிய பருத்தி செடிகள்
லால்குடி அருகே தொடர் மழையால் பருத்தி செடிகள் அழுகின. இதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லால்குடி அருகே தொடர் மழையால் பருத்தி செடிகள் அழுகின. இதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருத்தி செடிகள்
லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடி கிராமத்தில் மானாவாரி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்த பகுதியில் பருத்தி செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, பருத்தி செடிகள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக லால்குடி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பருத்தி தோட்டத்தில் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இழப்பீடு
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பருத்தி சாகுபடிக்கு உழவு, உரம், களை எடுப்பு, பூச்சியை தடுக்க மருந்து தெளிப்பு என பல வகைகளில் செலவு ஏற்படுகிறது. இந்த வகையில் ஒரு ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இந்த நிலையில் அறுவடை நேரத்தில் பெய்து வரும் தொடர் மழையால் செடியிலேயே பருத்தி முளைத்து வருகிறது. மேலும் செடிகளும் அழுகிவிட்டது. இதனால் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளை கணக்கீடு செய்து அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.