கும்பகோணத்தில் பருத்தி விலை 50 சதவீதம் வீழ்ச்சி


கும்பகோணத்தில் பருத்தி விலை 50 சதவீதம் வீழ்ச்சி
x
தினத்தந்தி 27 Jun 2023 12:27 AM IST (Updated: 27 Jun 2023 4:23 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் பருத்தி விலை கடந்த ஆண்டை விட 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் பருத்தி விலை கடந்த ஆண்டை விட 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

பருத்தி சாகுபடி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். 6 மாத கால பயிரான பருத்தி சாகுபடியில் குறைந்த பராமரிப்பு நல்ல மகசூல் மற்றும் அதிக வருமானம் கிடைத்ததால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு குவிண்டால் ரூ.12 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான நிலையில் விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடியில் ஆர்வம் அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது முதல் கட்டமாக பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அறுவடை செய்யப்பட்ட பருத்தியை விவசாயிகள் கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நடைபெறும் மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.

50 சதவீதம் விலை வீழ்ச்சி

கடந்த ஆண்டு ரூ.12 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையான பருத்தி இந்த ஆண்டு 50 சதவீதம் வரை விலை வீழ்ச்சி அடைந்து ரூ.6 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை ஆவதால் பருத்தி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் வேளாண் விளை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிப்பது வழக்கம் ஆனால் வழக்கத்தை விட பருத்தி இந்த ஆண்டு சுமார் 50 சதவீதம் வரை விலை வீழ்ச்சி அடைந்து இருப்பது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.

இடைத்தரகர்கள் இன்றி...

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'பருத்தி ஏலத்திற்கு வரும் வெளியூர் வியாபாரிகள் தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டு பருத்திக்கு மிகவும் குறைந்த விலையை நிர்ணயம் செய்து ஏலம் எடுத்து வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டு பருத்திக்கு அதிகபட்ச விலை கிடைத்ததால் இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் பருத்தி சாகுபடி செய்திருந்தோம். ஆனால் மாறாக பருத்தி விலை 50 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் பல விவசாயிகள் பருத்திக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தங்களது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட பருத்தி பஞ்சுகளை விற்காமல் வீட்டில் குவித்து வைத்துள்ளனர்.

எனவே அரசு உடனடியாக தலையிட்டு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கவும், இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பருத்தியை அரசு கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story