திருவாரூரில் விவசாயிகளிடம் இருந்து ரூ.2.06 கோடிக்கு பருத்தி கொள்முதல்
திருவாரூரில் விவசாயிகளிடம் இருந்து ரூ.2.06 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், காயவைத்த பருத்தி அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும் ஒழுங்குமுறைவிற்பனைகூட அதிகாரி தெரிவித்துள்ளார்
திருவாரூர்;
திருவாரூரில் விவசாயிகளிடம் இருந்து ரூ.2.06 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், காயவைத்த பருத்தி அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும் ஒழுங்குமுறைவிற்பனைகூட அதிகாரி தெரிவித்துள்ளார்.
பருத்தி சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் கோடை காலத்தில் பருத்தி சாகுபடி மேற்கொள்வார்கள். கடந்த ஆண்டு பருத்தியில் அதிக அளவில் லாபம் கிடைத்ததால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இந்த சாகுபடி தொடங்கிய சில நாட்களிலேயே மழை பெய்து அவற்றை வீணாக்கியது. தொடர்ந்து வெயில் அடித்ததால் பாதிப்புகள் குறைந்து பருத்தி செடிகள் நன்றாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் பெய்த மழையால் பருத்தி பாதித்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். தற்போது பருத்தி பஞ்சு பறிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கொள்முதல்
இந்த நிலையில் பருத்தி கொள்முதல் கடந்த 7-ந் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை தோறும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்து வருகிறது. கொள்முதல் செய்வதற்காக ஆந்திரா, கேரளா, கோவை, கும்பகோணம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்துள்ளனர். கடந்த ஆண்டு பருத்தியை ரூ.120-க்கு கொள்முதல் செய்த நிலையில், இந்த ஆண்டு ரூ.63-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைகாட்டிலும் இந்த ஆண்டு பருத்தி விலை 2 மடங்கு விலை குறைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கொள்முதலின் போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 89, குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 389, சராசரியாக ரூ.6 ஆயிரத்து 322 விலை போனது.
30 சதவீதம் வரை லாபம்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளோம். பருத்தியின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 மடங்கு குறைந்து விட்டது. பல்வேறு இடங்களில் இருந்து வியாபரிகள் கொள்முதல் செய்ய வந்த நிலையில், இந்திய பருத்தி கழகத்தில் இருந்து 1 கிலோ கூட இன்னும் கொள்முதல் செய்யவில்லை. பல்வேறு இயற்கை இடர்பாடுகளில் இருந்து பருத்தியை பாதுகாத்து விற்பனைக்கு கொண்டுவந்தால் போதிய விலை இல்லை என்பது வேதனையாக உள்ளது. எனவே கூடுதல் விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரையில் திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான், மூங்கில்குடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனா். திருவாரூரில் 2 முறை பருத்தி கொள்முதல் நடந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 3 ஆயிரத்து 607 குவிண்டால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முதல் கொள்முதலின் போது சுமார் ரூ.54 லட்சம் மதிப்பிலும், 2-வது கொள்முதலில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 87 ஆயிரத்து 514 மதிப்பிலும் என ரூ.2.06 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பருத்தியை விவசாயிகள் ஈரப்பதமாக கொண்டு வருவதால் அதன் விலை குறைந்து எடுக்கப்படுகிறது.அதே நிலையில் பருத்தியை நன்கு காயவைத்து கொள்முதலுக்கு கொண்டுவந்தால் சுமார் 30 சதவீதம் வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பருத்தியை காய வைத்து கொண்டு வந்தால் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படும் என்றார்.