ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி மறைமுக ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி மறைமுக ஏலம்
x

பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி மறைமுக ஏலம் வருகிற 14-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி மறைமுக ஏலம் வருகிற 14-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.தஞ்சை விற்பனைக் குழு செயலாளர் சரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பருத்தி மறைமுக ஏலம்

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு பாபநாசம், கும்பகோணம் மற்றும் திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி பஞ்சு அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு, தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம், கும்பகோணம் மற்றும் திருப்பனந்தாள் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வருகிற 14-ந் தேதி முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற உள்ளது.இந்த மறைமுக ஏலமானது ஒவ்வொரு வாரம் புதன்கிழமை கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும், வியாழக்கிழமை திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும், வெள்ளிக்கிழமை பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும் காலை 10 மணி அளவில் நடைபெறும். மேலும் நடப்பு ஆண்டு திருப்பனந்தாள் பகுதியில் உள்ள கீழமணக்குடி கிராமத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்

எனவே இந்த மறைமுக ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தி பஞ்சை அதிகபட்ச விலையில் விற்பனை செய்ய ஏதுவாக, அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும். அதாவது வெடித்து நன்கு மலர்ந்த பருத்தியை மட்டும் செடியில் இருந்து அறுவடை செய்ய வேண்டும். 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை பருத்தியை அறுவடை செய்ய வேண்டும். பருத்தியை காலை நேரத்தில் சேகரம் செய்வது சிறந்தது. இதனால் காய்ந்த இலை சருகுகள் பருத்தியில் ஒட்டாது.அவற்றை நிழலில், மணல் பரப்பிய களங்களில் உலர்த்த வேண்டும். நேரடி வெயிலில் பருத்தியை உலர வைப்பதால் பஞ்சின் நிறம் குறைவது மட்டுமல்லாமல் அதன் மென்மைத் தன்மையும் பாதிக்கும். மேலும் பருத்தியை ரகம் வாரியாக தனித்தனியே சேமிக்க வேண்டும். பருத்தி நன்கு உலர்த்திய பிறகு அதில் கலந்துள்ள இலைச்சருகுகள், தூசுகள், பூச்சி நோய்தாக்கியது ஆகியவற்றை தனியாகப் பிரிந்து தரத்தை மேம்படுத்த வேண்டும்.பருத்தியை காற்றோட்டமான அறைகளில் மணல் பரப்பிய தரையில் சேமிக்க வேண்டும்.

நல்ல விலை

பருத்தியை உலர வைக்க ஏதுவாக பாபநாசம் மற்றும் கும்பகோணம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டில் உள்ள பருத்தி உலர்த்தும் இயந்திர வசதியை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். எனவே விவசாயிகள் தரமான பருத்தியினை விற்பனைக்கு கொண்டு வந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி கொண்டு, நல்ல விலையில் விற்பனை செய்து பயன்பெறலாம்.மேலும் விபரங்களுக்கு கும்பகோணம் -9940913140, பாபநாசம் -9790169702, மற்றும் திருப்பனந்தாள் -7339480137 ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story