வாரச்சந்தையில் ரூ.51 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.51 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று பருத்தி சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பருத்தி சந்தைக்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன் மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் மற்றும் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 350 விவசாயிகள் 1870 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.7525-க்கும், குறைந்த பட்சமாக ரூ.6,299-க்கும், கொட்டு ரக பருத்தி அதிகபட்சமாக ரூ.6,199-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4,090-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.51 லட்சத்து 9 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இந்த சந்தையில் திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி, கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.