செடிகளில் காய்ந்து வீணாகும் பருத்தி
பருத்தியின் விலை குறைந்ததால் முதுகுளத்தூர் தாலுகாவில் பல கிராமங்களில் செடிகளிலேயே பருத்தி பஞ்சுகள் வீணாகி வருகிறது.
முதுகுளத்தூர்,
பருத்தியின் விலை குறைந்ததால் முதுகுளத்தூர் தாலுகாவில் பல கிராமங்களில் செடிகளிலேயே பருத்தி பஞ்சுகள் வீணாகி வருகிறது.
விளைச்சல் பாதிப்பு
முதுகுளத்தூர் தாலுகாவில் பருத்தி மற்றும் மிளகாய் விவசாயமே அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக நெல்லைவிட பருத்தி, மிளகாய்க்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படாது என்பதாலும், இந்த பகுதியில் உள்ள மண்ணுக்கு மிளகாய், பருத்தி உகந்ததாக இருந்து வருகிறது. இதனால் பருத்தி, மிளகாய் விவசாயத்திலேயே இப்பகுதி விவசாயிகள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் முதுகுளத்தூர் தாலுகா மற்றும் தாழியாரேந்தல், செங்கற்படை, கீழத்தூவல், மேலச்சிறுபோது, மிக்கேல்பட்டினம், கருமல், பூசேரி உள்ளிட்ட பல கிராமங்களில் பருத்தி விவசாயம் நடைபெற்று வருகின்றது. அதுபோல் இந்த ஆண்டு பருவமழை சீசனில் சரிவர மழை பெய்யாததாலும், பூச்சி தாக்குதலாலும் பருத்தி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
ரூ.45-க்கு விற்பனை
அது மட்டுமின்றி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பருத்தியின் விலை வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி ரூ.120 வரை விலைபோன நிலையில் இந்த ஆண்டு பருத்தி சீசன் தொடங்கிய சில மாதங்களில் கிலோ ரூ.90 வரை விற்பனையானது. தற்போது ரூ.45-க்கு மட்டுமே விலை போகின்றது.
பருத்தியில் விலையும் வெகுவாக குறைந்து போனதோடு பருத்தியை பறிக்க ஆட்கள் யாரும் வராததாலும், தேரிருவேலி, கருமல் உள்ளிட்ட கிராமங்களில் செடிகளிலேயே பருத்தி பஞ்சுகள் காய்ந்தபடி வெயிலில் கிடந்து வீணாகி வருகின்றன.
தற்போது முதுகுளத்தூர் தாலுகா சுற்றிய அனைத்து கிராமங்களிலும் பருத்தி சீசன் முடிந்து விட்டது என்பது குறிப்பிடதக்கது.