சின்னாளப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி விலகக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா


சின்னாளப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி விலகக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா
x

சின்னாளப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி விலகக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி விலகக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரூராட்சி கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 17 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது. ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். பின்னர் அந்த சுயேச்சை கவுன்சிலரும் தி.மு.க.வில் இணைந்து கொண்டார். தற்போது பேரூராட்சி தலைவராக பிரதீபா கனகராஜூவும், துணைத்தலைவராக ஆனந்தி பாரதிராஜாவும் உள்ளனர்.

இந்தநிலையில் சின்னாளப்பட்டியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 11 மணி அளவில் பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ் கூட்ட அரங்கிற்கு வந்தார். அப்போது கூட்டரங்கத்தில் 3 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தனர். இதனால் கூட்டத்தை ஒத்திவைப்பதாக தலைவர் பிரதீபா அறிவித்து விட்டு, தனது அறைக்கு சென்றுவிட்டார்.

கவுன்சிலர்கள் தர்ணா

இதற்கிடையே 11.45 மணி அளவில் பேரூராட்சி கூட்ட அரங்கிற்கு 10 தி.மு.க. கவுன்சிலர்கள் வந்து தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர். மேலும் அங்கிருந்த கவுன்சில் தீர்மான புத்தகத்தை அவர்கள் எடுத்து பார்த்தனர். அப்போது அங்கு வந்த பேரூராட்சி ஊழியர், கூட்டத்தை தலைவர் ஒத்தி வைத்துவிட்டார். இதனால் தீர்மான புத்தகத்தை பார்க்க கூடாது என்று கூறி அவர் அந்த புத்தகத்தை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த 10 கவுன்சிலர்களும், அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. தலைவரின் கணவர் பேரூராட்சி விவகாரங்களில் தலையிட்டு அத்துமீறி செயல்படுகிறார். எனவே முறைகேடுகளுக்கு துணைபோகும் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார், தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தலைவர் ராஜினாமா செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே தி.மு.க. நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்து கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால் அதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பேரூராட்சி தலைவரை மாற்ற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை மனுவாக எழுதி அதில் 10 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர். பின்னர் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

இதுகுறித்து தலைவர் பிரதீபா கனகராஜூவிடம் கேட்டபோது, இன்றைய (அதாவது நேற்று) கூட்டம் 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நானும், செயல் அலுவலரும் மன்ற கூட்ட அரங்கிற்கு சென்று அமர்ந்திருந்தோம். கூட்டத்திற்கு 3 கவுன்சிலர்கள் மட்டுமே வந்தனர். 3 பேரை வைத்து கூட்டத்தை நடத்த முடியாது என்பதற்காக கூட்டத்தை ஒத்தி வைத்தேன். ஆனால் என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக மற்ற கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர் என்றார்.

தி.மு.க.வை சேர்ந்த பேரூராட்சி தலைவரை பதவி விலகக்கோரி, தி.மு.க. கவுன்சிலர்களே போராட்டம் நடத்திய சம்பவம் சின்னாளப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story