ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறியதால் பரபரப்பு


ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறியதால் பரபரப்பு
x

பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை கூட்டத்தில், பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை என்ற விவாதத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை கூட்டத்தில், பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை என்ற விவாதத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சிப்பேரவை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை கூட்டம் மு.வ.அரங்கில் நேற்று நடந்தது. துணைவேந்தர் குமார் தலைமை தாங்கினார். பதிவாளர் (பொறுப்பு) சதாசிவம் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் அறிக்கை வாசிக்க கூட்டம் தொடங்கியது. 79 உறுப்பினர்களில் 50 பேர் மட்டும் பங்கேற்றனர். இதில், கவனஈர்ப்பு தீர்மானங்கள் உறுப்பினர்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன. உறுப்பினர் பொன்ராம் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆய்வுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம், மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கல்விக்கட்டணம் நிர்ணயிக்க குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த துணைவேந்தர், இந்த விவகாரத்தில் அரசு மட்டுமே முடிவு செய்ய முடியும் என்றார். தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் இதர பணிகளை மேற்கொள்ள சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் நிதி பெற ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் தொழிற்சாலைகள் மூலம் உதவி செய்யலாம் என்று வலியுறுத்தினார். பிரபாகர் ஆட்சிமன்றக்குழுவுக்கான ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்றார். கோபி, பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெறுபவர்களுக்கான பணபலன்களை ஓய்வு பெறும் நாளன்று வழங்க வேண்டும் என்றார்.

சம்பளம் வழங்கவில்லை

வேளாங்கண்ணி ஜோசப், சுற்றுலா மற்றும் ஓட்டல் மேலாண்மை துறையில் பணியாற்றிய 4 பேராசிரியர்களுக்கும் தற்போது வரை ஓய்வூதிய பலன்கள் வழங்கவில்லை. ஓய்வுபெறும் நாளுக்கு முன்னதாக அவர்களை பல்கலைக்கழக கல்லூரிக்கு இடமாற்றம் செய்து பணப்பலன் கிடைக்காமல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் இறந்து விட்டார். இதில் ஐகோர்ட்டு உத்தரவு பின்பற்றப்பட்டு, விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக துணைவேந்தர் தெரிவித்தார். பொன்ராம், அவசர தீர்மானம் கொண்டு வந்து, மகளிரியல் துறையில் பணியாற்றும் 5 பேருக்கு கடந்த 9 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்றார். சுல்தான் இப்ராகிம் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் வரவு, செலவு குறித்து ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தங்கராஜ் வாசித்தார். கடந்த நவம்பர் மாதம் ஆராய்ச்சி ஆலோசனைக்குழு பரிந்துரையின் பேரில் ஜனவரி மாதம் நடந்த ஆட்சிமன்றக்குழுக்கூட்டத்தில், சுயநிதிக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சி வழிகாட்டி வழங்குவது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. அப்போது வேளாங்கண்ணி ஜோசப், பொன்ராம், பிரபாகர், சுல்தான்இப்ராகிம் ஆகியோர், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகம் விதித்துள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றனர்.

ஆராய்ச்சி வழிகாட்டி

ஆனால், குழு பரிந்துரையின் படி மட்டுமே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்ற முடியாது எனவும் துணைவேந்தர் கூறினார். தொடந்து உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், ஓட்டெடுப்பு நடத்தலாமா என்று துணைவேந்தர் கேட்டபோது, கோரிக்கையை வலியுறுத்திய உறுப்பினர்களை தவிர, யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் ஆராய்ச்சி வழிகாட்டிக்கான நிபந்தனைகள் தொடரும் என துணைவேந்தர் அறிவித்தார். பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு தொடங்கியுள்ள நிலையில், அதற்கான பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை, இடவசதி இல்லை என்று உறுப்பினர்கள் பொன்ராம், பிரபாகர், சுல்தான் இப்ராகிம், முன்னாள் பதிவாளர் சங்கர் ஆகியோர் வலியுறுத்தினர்.

வெளிநடப்பு

அவர்களுக்கு பதிலளித்த துணைவேந்தர், அனைவரும் விவாத பொருளை திசைதிருப்புவதாகவும், முன்வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கும் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும் தொடர்பில்லை. பல்கலைக்கழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக வீழ்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், அவரவர் இருக்கைக்கு செல்லுமாறு கோபமாக பேசினார். இதையடுத்து மூத்த உறுப்பினர் சங்கர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், தங்களது கருத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்வது போல துணைவேந்தர் நடந்து கொண்டால் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்ய நேரிடும் என்றனர்.

இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய துணைவேந்தர், அவையில் தேவையில்லாத விஷயங்களை பேசுவதும், தவறான தகவலை தெரிவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழகத்தையும், கல்லூரியையும் ஒப்பிட முடியாது. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இட வசதி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான கட்டிடங்கள் கொரோனா காலத்திற்கு பின்னர் பயன்படுத்தப்படாமல் வீணாக உள்ளது. அடுத்த கல்வியாண்டில், வருகிற ஜூன் மாதம் முதல் அனைத்து கட்டிடங்களும் பயன்பாட்டுக்கு வரும். உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டு வந்து அவையில் பேச வேண்டும் என்றார்.

பல்கலைக்கழக பட்ஜெட்

கடந்த நிதியாண்டு இறுதியில் ரூ.1627.15 லட்சம் பற்றாக்குறை இருந்தது. இந்த நிதியாண்டுக்கான தொடக்க நிலையில் ரூ.19,264.23 லட்சம் பற்றாக்குறையாக உள்ளது. இந்த நிதியாண்டு வரவு ரூ.24,538.82 லட்சம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பதிப்பகம், இதர வருமானம், துணை வருமானம், நிதியுதவி, இதர நிதியுதவி, கல்விக்கட்டணம், துறை வருமானம், தேர்வுக்கட்டணம், கட்டுமானங்கள், சொத்துக்கள் வருமானம் ஆகியவற்றில் பிற வருமானங்கள் மூலம் ரூ.2022.80 லட்சம் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. செலவினங்கள் ரூ.42,175.90 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் ரூ.1365.30 லட்சம் வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ரூ.1512.66 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Next Story