கவுன்சிலர் திடீர் உண்ணாவிரத போராட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு
புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாா்.
புவனகிரி,
புவனகிரி பேரூராட்சியின் 2-வது வார்டு கவன்சிலர்(காங்கிரஸ்) கிருஷ்ணன். இவர் நேற்று காலை 9 மணிக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், தனது வார்டு பகுதியில் ரூ.35 லட்சம் செலவில் வடிகால் ஒன்று தற்போது கட்டப்பட்டது. இந்த வடிகால் தரமில்லாமல் கட்டப்பட்டு இருப்பதுடன், பணிகள் அனைத்தும் முழுமை பெறாத நிலையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்து, பணியை தரமாகவும், முழுமையாகவும் முடித்து தர வேண்டும், அதுவரைபோராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார்.
இதன் பின்னர் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஆரோக்கியராஜ், பேரூராட்சி அலுவலர் பழனிகுமார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாளை(அதாவது இன்று) பணிகளை தொடங்கி முழுமையாக முடித்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாலை 3.30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு சென்றார்.