17-வது வார்டை முன்மாதிரியாக கொண்டு வர தீவிரமாக பணியாற்றும் கவுன்சிலர்


17-வது வார்டை முன்மாதிரியாக கொண்டு வர தீவிரமாக பணியாற்றும் கவுன்சிலர்
x

பெரம்பலூர் நகராட்சியில் 17-வது வார்டை முன்மாதிரியாக கொண்டு வர கவுன்சிலர் துரை.காமராஜ் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

பெரம்பலூர்

வெற்றி பெற்றார்

பெரம்பலூர் நகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அரணாரையை சேர்ந்த துரை.காமராஜ். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து, அதனை பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் மற்றும் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவைகளை நிறைவேற்றி வருகிறார். துரை.காமராஜ் தனது வார்டை பெரம்பலூர் நகராட்சியில் முன்மாதிரி வார்டாக கொண்டு வர தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன், தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. வழியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான குன்னம் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் நகர தி.மு.க. செயலாளரும், பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் ஆகியோரின் வழிக்காட்டுதலின் பேரில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

நீண்ட கால பிரச்சினையை...

இவர் அரணாரை தெற்கு தெரு, நடுத்தெரு ஆகியவற்றில் வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக சந்தித்து வந்த குறைந்த மின்னழுத்த பிரச்சினையை சரி செய்யும் வகையில் உயர் மின்னழுத்தத்துடன் கூடிய புதிய மின்மாற்றி அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். மேலும் வார்டுக்குட்பட்ட பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வருவதோடு, நடைபெறும் பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். மேலும் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் புகார் பெட்டிகள் வைத்து குறைகளை உடனுக்குடன் தீர்த்து வந்தார்.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடத்திய புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். அங்கன்வாடிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுத்தார்.

அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று அரணாரை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அதற்கு பெரும் முயற்சி செய்து பள்ளி அருகே அதற்காக ரூ.25 லட்சத்தில் கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த மே மாதம் 13-ந் தேதி தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு சுகாதார நிலையம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

சொந்த நிதியில்...

அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த மார்பளவு மகாத்மா காந்தி சிலைக்கு பதிலாக, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.45 ஆயிரத்தில் புதிதாக காந்தி சிலை அமைத்து கொடுத்தது, அவரது தேசப்பற்றை காட்டுகிறது. பொதுமக்களின் நலனை கருதி வார்டில் திருட்டை தடுக்க தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மற்ற கவுன்சிலர்களுக்கு முன்னுதாரனமாக செயல்படுகிறார். அவரது இந்த செயலை பொதுமக்கள் மட்டுமின்றி, போலீசாரும் பாராட்டினர்.

நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் புத்தாடைகளை வழங்கி, அவர்களை மகிழ்வித்து வருகிறார். சமீபத்தில் மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அரணாரை பகுதியில் தனியார் கண் மருத்துவமனையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமினை நடத்தினார். மேலும் வார்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் முதல் ஆளாக சென்று கலந்து கொள்கிறார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

மேலும் தனது வார்டுக்குட்பட்ட கல்யாண் நகர், ஏ.வி.ஆர். நகர், துரைசாமி நகர் ஆகியவற்றில் பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்கவும் மற்றும் கல்யாண் நகரில் விளையாட்டு மைதானம், நூலகம் அமைக்கவும், வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்து வருவதாக பெரம்பலூர் நகர்மன்ற 17-வது வார்டு கவுன்சிலர் தெரிவித்தார்.


Next Story