தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கவுன்சிலர்கள் வாக்குவாதம்
6 மாதங்களாக நிறைவேற்றிய தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கூடலூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
6 மாதங்களாக நிறைவேற்றிய தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கூடலூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை இல்லை
கூடலூர் நகராட்சி மன்ற கூட்டம் நகர சபை அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்ற தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நகராட்சி வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு மன்ற ஒப்புதல் பெற வாசிக்கப்பட்டது.
கவுன்சிலர் உஸ்மான்:- இதுவரை 6 மன்ற கூட்டங்கள் நடைபெற்று அதிக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தூய்மை பணியாளர் பணி நியமனம், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை எந்த தீர்மானங்களும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படவில்லை. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கவுன்சிலர்கள் வாக்குவாதம்
இதே கருத்தை கவுன்சிலர்கள் சத்தியசீலன், வெண்ணிலா, தனலட்சுமி, ஷாகிதா உள்பட பலர் வலியுறுத்தியதோடு, மன்ற தலைவர், நகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினர். இந்த சமயத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ராஜு பேசினார். அப்போது கவுன்சிலர் உஸ்மானுக்கும், கவுன்சிலர் ராஜுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து உஸ்மானுக்கு ஆதரவாக சில கவுன்சிலர்கள் பேசினர். இதனால் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களாக நடந்த கூட்டங்களில் பதிவு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீண்டும் வாசிக்க வேண்டும் என கூறினர். இதைத் தொடர்ந்து ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாசிக்க உத்தரவிட்டார். இதனால் தீர்மானங்கள் மீண்டும் வாசிக்கப்பட்டது.
சாலையோர ஆக்கிரமிப்புகள்
பின்னர் ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், இனி வரும் காலங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து கூடலூர் நகரில் வாகன நிறுத்த வசதி செய்து தர வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மன்ற தலைவர் பரிமளா தெரிவித்தார்.