திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார் மனு
திருப்பத்தூர் நகராட்சியில் மக்களுக்கான அடிப்படை பணிகளை செய்ய அதிகாரிகள் முன்வருவதில்லை என நகராட்சி நிர்வாக இணை ஆணையரிடம் கவுன்சிலர்கள் புகார் அளித்தனர்.
ஆய்வுக்கூட்டம்
அதிகாரிகள் சர்வாதிகாரிகளாக செயல்படுவதால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாக நகராட்சி இணை ஆணையர் (நிர்வாகம்) சாரதாவிடம், திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த நகராட்சிகளின் நிர்வாக இயக்குநரக இணை ஆணையர் சாரதாவை மன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் வரவேற்றார்.
இதையடுத்து, ஆணையாளர் ஜெயராமராஜா முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி, சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு அலுவலர் கவுசல்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்வரவில்லை
இக்கூட்டத்துக்கு பிறகு. நகராட்சி மன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில், நகராட்சி திமுக கவுன்சிலர்கள் ஒன்றாக திரண்டு நகராட்சி நிர்வாக இணை ஆணையர் சாரதாவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துமனு அளித்தனர். அவர்கள் கூறும்போது, "தமிழ்நாட்டின் மிக பழமையான நகராட்சிகளில் திருப்பத்தூர் நகராட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தன நகரமாக விளங்கிய திருப்பத்தூர் நகரம் தற்போது சாக்கடை நகரமாக மாறிவிட்டது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதையுமே செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை.
இங்கு ஆணையாளரை தவிர மற்ற அதிகாரிகள் சர்வாதிகாரிகளை போல செயல்படுகின்றனர். இதனால், மக்களிடம் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. நகராட்சி குறைகளை பொறியாளரிடம் சொல்ல கவுன்சிலர்கள் போன் செய்தால் அவர் போனை எடுப்பதே இல்லை. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள் சரிவர வசூலிக்கப்படவில்லை.
மேலும், திருப்பத்தூர் நகராட்சியில் காலிப்பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளதால் பல பணிகள் பாதிக் கப்பட்டுள்ளன. சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் 8 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன.
குப்பை கழிவு
நகராட்சியில் ஒரு நாளைக்கு 25 டன்குப்பைக்கழிவு சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பையை கொட்டி தரம் பிரிக்க 5 முதல் 10 ஏக்கரில் இடம் தேர்வு செய்ய வேண்டும் என பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் இடம் தேர்வு செய்யப்படவில்லை.
எனவே, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய, அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றி தரவேண்டும். தினசரி குப்பையை அகற்ற வேண்டும். சாலை, மின்விளக்கு, குடிநீர், பொது சுகாதாரம் போன்ற தேவை களை அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்த வேண்டும் என்றனர்.
அனைத்துகோரிக்கைகளையும் பரிசீலிப்பதாகவும், கவுன்சிலர்களின் கோரிக்கை மனுவை நகராட்சி நிர்வாக இயக்குநரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண்பதாகவும் இணை ஆணையர் சாரதா உறுதியளித்தார்.