குழித்துறையில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்
சாலை, குடிநீர் பணிகளை உடனடியாக முடிக்க வலியுறுத்தி குழித்துறையில் நகராட்சி தலைவர் பொன். ஆசை தம்பி தலைமையில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழித்துறை:
சாலை, குடிநீர் பணிகளை உடனடியாக முடிக்க வலியுறுத்தி குழித்துறையில் நகராட்சி தலைவர் பொன். ஆசை தம்பி தலைமையில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை, குடிநீர் பணி
குழித்துறை நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு திட்டத்திற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சாலையில் குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த பணி முடிக்கப்படாததால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை உடனே நடத்தி முடிக்கவும், சாலைகளை உடனே சீரமைக்கவும் சத்தியாக்கிரக போராட்டம் நடத்துவது என குழித்துறை நகராட்சி தலைவர் பொன். ஆசை தம்பி தலைமையில் நடந்த அனைத்து கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சத்தியாக்கிரக போராட்டம்
அதன்படி நேற்று குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றது. இந்த சத்தியாக்கிரக போராட்டத்திற்கு தி.மு.க.வை சேர்ந்த குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பி தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணைத் தலைவர் பிரபின் ராஜா முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சர்தார் ஷா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
போராட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த அருள்ராஜ், லில்லி புஷ்பம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜலீலா ராணி, ஜூலியட் மெர்லின் ரூபி, விஜயலட்சுமி, லலிதா, பா. ஜனதாவை சேர்ந்த விஜு, ஜெயந்தி, மினிகுமாரி, செல்வ குமாரி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரீகன், ஆட்லின் கெனில், ரோஸ்லெட், சுயேச்சை உறுப்பினர் ஜெயின் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த போராட்டத்தை பா.ஜனதா கட்சியை சேர்ந்த உறுப்பினர் ரெத்தினமணி பேசினார். முடிவில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த எம்.பி.ரவி நன்றி கூறினார்.