2-வது நாளாக போராட்டம் நடத்திய கவுன்சிலர்கள்
வில்லுக்குறி பேரூராட்சியில் கவுன்சிலர்கள் 2-வது நாளாக கஞ்சி காய்ச்சி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைைமயில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
அழகியமண்டபம்,
வில்லுக்குறி பேரூராட்சியில் கவுன்சிலர்கள் 2-வது நாளாக கஞ்சி காய்ச்சி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைைமயில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
உள்ளிருப்பு போராட்டம்
வில்லுக்குறி பேரூராட்சியில் வழக்கமான கூட்டம் நேற்று முன்தினம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் அனைத்து கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களும் கடந்த ஒரு ஆண்டாக பேரூராட்சியில் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை என செயல் அலுவலர் மற்றும் தலைவரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி துணைத்தலைவர் ராமலிங்கம் தலைமையில் 14 கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் இரவு வரை தொடர்ந்தது. இதையடுத்து செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரவு முழுவதும் போராட்டம் நீடித்தது. கவுன்சிலர்கள் விடிய, விடிய பேரூராட்சி அலுவலகத்திலேயே படுத்து தூங்கினர்.
பிரின்ஸ் எம்.எல்.ஏ.
நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. அப்போது அலுவலக வளாகத்திலேயே கஞ்சி காய்ச்சினர். இதுகுறித்து தகவல் அறிந்து குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து கவுன்சிலர்களிடம் குறைகளை கேட்டார். பின்னர், அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்ததும் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒரு கவுன்சிலருக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து கவுன்சிலர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தால் பேரூராட்சி வளாகம் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக காணப்பட்டது.