கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது
குன்னூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
குன்னூர்
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரையின் பேரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குன்னூர் அருகே ஆடர்லி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மேல் குன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையில் போலீசார் ஆடர்லி பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டின் முன்பு செடி ஒன்று வளர்ந்து இருந்ததை பார்த்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த வீட்டில் அரிசி, வெல்லம், செடியின் இலைகளை கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது. இதையடுத்து 10 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சியதாக ஆடர்லியை சேர்ந்த சுக்குபோனா (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.