கல்லூரிகளில் சேர முன்னாள் படைவீரர் சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கல்லூரிகளில் சேர முன்னாள் படைவீரர் சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2022-23-ம் கல்வியாண்டுக்கான மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பி.எஸ்சி. (நர்சிங்), பி.எஸ்சி (விவசாயம்), பி.எட்., இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எப்.எஸ்.சி., ஆசிரியர் பயிற்சி, பட்டயப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் போன்ற பல்வேறு படிப்புகளுக்காக கல்லூரிகளில் சேர தமிழ்நாடு அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், அவர்களை சார்ந்தோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சார்ந்தோர் சான்று பெறுதல் வேண்டும். இணையதளம் மூலம் முன்னாள் படைவீரரின் அசல் படை விலகுச்சான்று, அடையாள அட்டை, சார்ந்தோர்களின் பள்ளி இறுதிச் சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், முன்னாள் படைவீரர், விதவையரின் விண்ணப்பம் ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக exwelvpm@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெறலாம். மேலும் கடந்த கல்வியாண்டில் பெற்ற சார்ந்தோர் சான்றிதழை இந்த கல்வியாண்டில் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தப்படும் பட்சத்தில் கலந்தாய்வின்போது தங்களின் மகன், மகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். சார்ந்தோர் சான்று பெறுவதற்கு உரிய சான்று பதிவேற்றம் மற்றும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உதவி இயக்குனர் , முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண் 04146-220524 -ல் தொடர்பு கொண்டு உரிய விவரம் அறிந்து பயன்பெறலாம்.
இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.