சங்கரன்கோவிலில் கள்ள நோட்டுகள் சிக்கிய விவகாரம்:ஈரோட்டில் போலீசார் அதிரடி விசாரணை
சங்கரன்கோவிலில் கள்ள நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில் ஈரோட்டில் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவிலில் கள்ள நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில் ஈரோட்டில் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கள்ள நோட்டுகள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பகுதியில் தாலுகா போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் காருக்குள் இருந்த ஒரு பையில் கத்தை, கத்தையாக ரூபாய் நோட்டுகள் போன்று இருந்தது. அவற்றை போலீசார் பார்த்த போது அவைகள் அனைத்தும் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து காரில் இருந்த ரூ.38 லட்சம் கள்ள நோட்டுகள், ரூ.2 லட்சம் மற்றும் 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சந்தோஷ், சிராஜ்கரிம், வீரபத்திரன், ஜெகதீஷ், ஈரோட்டை சேர்ந்த வளர்மதி (வயது 42), கிருஷ்ணவேணி (23) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலியான முகவரி
இந்த நிலையில் கள்ள நோட்டு விவகாரத்தில் கைதான ஈரோட்டை சேர்ந்த 2 பெண்கள் தாங்கள் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியை சேர்ந்தவர்கள் என விசாரணையின்போது போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வண்டியூரான் கோவில் வீதியில், அவர்கள் கொடுத்த முகவரியில் உள்ள வீட்டிற்கு சென்று விசாரித்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, 'கள்ள நோட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் கொடுத்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினோம். ஆனால் அந்த பகுதியில் இவர்கள் வசிக்கவில்லை என்பது தெரிய வந்தது. மேலும் 2 பேரும் போலியான முகவரியை போலீசாருக்கு கொடுத்துள்ளனர்.
இதுபற்றி சங்கரன்கோவில் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் கைது செய்யப்பட்ட 2 பெண்களும் ஈரோட்டை சேர்ந்தவர்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.