பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. 2-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் அவை எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மாதம் 5, 6-ந்தேதிகளில் பழனியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்நிலையில் கடந்த 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு நேற்று, பழனி மலைக்கோவிலில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார்.
எண்ணும் பணி
பின்னர் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதனை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணி 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
-----------