போலி ஆவணம் மூலம் நிலம் விற்ற வழக்கு; கொடைக்கானல் தம்பதிக்கு 8 ஆண்டுகள் சிறை


போலி ஆவணம் மூலம் நிலம் விற்ற வழக்கு; கொடைக்கானல் தம்பதிக்கு 8 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 20 May 2023 2:30 AM IST (Updated: 20 May 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணம் மூலம் நிலம் விற்ற வழக்கில் கொடைக்கானல் தம்பதிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானலை அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது45). இவருக்கு அதேபகுதியில் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமாரசாமி (73), அவருடைய மனைவி பழனியம்மாள் (58), அவர்களது மகன் பாலமுருகன் (40) ஆகியோர் சேர்ந்து பாஸ்கரனின் நிலத்துக்கு போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2007-ம் ஆண்டு பாஸ்கரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட குமாரசாமி, பழனியம்மாள், பாலமுருகன் ஆகியோருக்கு தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.400-ம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் மோகனா உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் 3 பேரையும் கைது செய்ய கொடைக்கானல் சென்றனர். ஆனால் அவர்கள் மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் குமாரசாமி, பழனியம்மாள் ஆகியோரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலமுருகனை தேடி வருகின்றனர்.


Next Story