மகன் கொடுமைப்படுத்தியதால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி
தேனி அருகே ராணுவ வீரரான மகன் கொடுமைப்படுத்தியதால் விரக்தியடைந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
தேனி அருகே ராணுவ வீரரான மகன் கொடுமைப்படுத்தியதால் விரக்தியடைந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
விஷம் குடித்தனர்
தேனி அருகே உள்ள மதுராபுரி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 61). இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (56).
இவர்கள் 2 பேரும் வடபுதுப்பட்டியில் உள்ள தங்களுக்கு சொந்தமான காலியிடத்துக்கு நேற்று வந்தனர். ரவிச்சந்திரன் தனது காவலாளி சீருடையில் வந்தார். அங்கு அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பின்னர் ரவிச்சந்திரன், தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேலாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தானும், தனது மனைவியும் விஷம் குடித்ததாக தெரிவித்தார்.
அதன்பேரில் நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் தம்பதியிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், தங்களது மகன் ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தவர் திரும்பி வேலைக்கு செல்லவில்லை. மதுபோதைக்கு அடிமையான அவர், எங்களை கொடுமைப்படுத்தியதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.