சிறுவனுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி
சிறுவனுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி
திருப்பூர்
ஊத்துக்குளி அருகே தோட்டத்தை அபகரிக்க முயற்சிப்பதாக கூறி விவசாயி தனது மனைவி, மகனுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயன்ற தம்பதி
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக கொடுத்தனர். அப்போது கணவன்-மனைவி தனது 4 வயது சிறுவனுடன் மனு கொடுக்க வந்தவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அதற்குள் அங்கிருந்த போலீசார் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் அந்த பெண், மறைத்து வைத்திருந்த விஷபாட்டிலையும் போலீசார் போராடி பறித்தனர்.
பின்னர் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து 3 பேர் மீதும் ஊற்றினார்கள். அதன்பிறகு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் ஊத்துக்குளி தாலுகா பல்லகவுண்டன்பாளையம் காவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சம்பத் (வயது 49), அவருடைய மனைவி உமாமகேஸ்வரி (45), மற்றும் மகன் என்பது தெரியவந்தது. காவுத்தம்பாளையத்தில் உள்ள 6 ஏக்கர் விவசாய நிலத்தை பக்கத்து தோட்டத்துக்காரர் பறிக்க முயல்வதாக கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.
தோட்டத்தை அபகரிக்க முயற்சி
அதன்பிறகு சம்பத் தனது குடும்பத்தினருடன் சென்று குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் அதிகாரியிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு பாத்தியப்பட்ட விவசாய நிலம் காவுத்தம்பாளையத்தில் 6 ஏக்கர் உள்ளது. அதில் வாழை மற்றும் மசால் புல் நடவு செய்து விவசாயம் செய்து வருகிறேன். பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்களுக்கும், எனக்கும் இடையே அடிக்கடி எல்லைப்பிரச்சினை வழிப்பிரச்சினை இருந்து வருகிறது. எனது நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்து வந்தனர். இதற்காக எனது நிலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தினேன்.
கடந்த மாதம் 27-ந் தேதி எனது நிலத்துக்குள் புகுந்து கம்பி வேலியை சேதப்படுத்தி கேமராவை உடைத்துள்ளனர். மேலும் எனக்கு கொலைமிரட்டல் விடுத்து மோட்டார்களையும் சேதப்படுத்தினார்கள். இதுகுறித்து குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து எனக்கு இடையூறு செய்து எனது தோட்டத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடனடியாக போலீசார் துணையுடன் சென்று பாதுகாப்பு வழங்கி விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.