கொலை செய்யப்பட்ட வாலிபர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


கொலை செய்யப்பட்ட வாலிபர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

கும்பகோணத்தில், கொலை செய்யப்பட்ட வாலிபர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

கும்பகோணத்தில், கொலை செய்யப்பட்ட வாலிபர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

காதல் திருமணம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் துலுக்கவேலி அய்யா கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் சரண்யா(வயது 24). திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொன்னூரை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகன் மோகன்(31). இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

சரண்யாவின் தாயும், மோகனின் தாயும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இருவரும் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் மோகன்-சரண்யா இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு சரண்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்பு

எதிர்ப்பை மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகனும், சரண்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மோகன், சரண்யா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சரண்யா, மோகன் ஆகியோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்களும், நண்பர்களும் நேற்று அதிக அளவில் திரண்டு இருந்தனர்.

இதனால் ஆஸ்பத்திரியை சுற்றி சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் இருவரது உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதனிடையே சரண்யா-மோகன் கொலையை கண்டித்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன்பு பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னைபாண்டியன் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் செல்லக்கண்ணு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், நீலப்புலிகள் கட்சி தலைவர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட மோகன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆணவ கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story