கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில், நாளை (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற உள்ளது.
இதில் விவகாரத்து வழக்கு தவிர மற்ற மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் சமாதானமாக போக கூடிய குற்றவியல் வழக்குகள் நீதிபதிகளை கொண்ட அமர்வுகளை ஏற்படுத்தி தீர்வுக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
பயன் பெறலாம்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படுவதால் முத்திரைதாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெறும் வாய்ப்பு உள்ளது. மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது.
எனவே வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள தங்களின் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களிலோ அல்லது சட்டப்பணிகள் குழுவிடமோ தெரிவித்து பயன் அடையுமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.