குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு
திருப்பூர் கோர்ட்டில் குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு புதிதாக தொடங்கப்பட்டுள்ளதால் வழக்குகள் விரைவில் முடியும் என்று முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் கூறினார்.
சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவால் திருப்பூர் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள கோர்ட்டு வளாகங்களில் நேற்று முதல் குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு மையத்தில் குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு அலுவலகத்தை, முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு திறந்து வைத்தார்.
வழக்கு விரைவில் முடியும்
நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் பேசியதாவது:-
மாவட்டத்தில் குற்றவியல் வழக்குகளை குறைக்கும் வகையில் குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் நோக்கம் என்பது தேவைப்படும் குற்றவியல் வழக்கு தொடர்பானவர்களுக்கு, தரமான மேம்பட்ட சட்ட சேவை வழங்குதல், குற்றவியல் வழக்குகளில் தேர்ச்சி மிக்க உதவியை சட்ட உதவி மையம் மூலம் அளிப்பது, இந்த அமைப்பின் வழக்கறிஞர்களை பயனாளிகள் எளிதில் அணுக முடியும். மூத்த வழக்கறிஞர்கள் மூலம் பயனாளிகளுக்கு தெளிவான வழக்காட்டுதல் சாத்தியப்படும்.
சிறந்த சட்ட ஆலோசனைகளை வழங்குவார்கள். வழக்கு நிலை குறித்த தகவல்களை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். சட்ட உதவி வழக்கறிஞர்களின் பொறுப்பு மற்றும் கட்டுப்பாட்டை உறுதி செய்ய முடியும். வழக்குகள் விரைவாக நடத்தப்படுவதால் வழக்கு விரைவில் முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைப்பு வழக்கறிஞர்கள்
இந்த அமைப்புக்கான வழக்கறிஞர்களாக நடராஜன், லார்டு இங்கர்சல், கவுசல்யா, சந்தியா ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, முதன்மை சார்பு நீதிபதி செல்லதுரை, கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, நீதித்துறை நடுவர்கள் பழனிகுமார், முருகேசன், கார்த்திகேயன், ரஞ்சித்குமார், ஆதியான், திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் வக்கீல்கள் பழனிசாமி, சண்முகவடிவேல், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.