சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வழக்கு மாற்றம்: தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்
சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போதுஅங்கு சந்தேகப்படும்படி இருந்த 2 வாலிபர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள போலீசார் குடியிருப்பு பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு
விசாரணையில் ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த மகபூபின் மகன் ஆசிப் முசாப்தீன் (வயது 28) என்பவருக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களிடம் ஆன்லைன் மூலமாக உரையாடிய தகவலும் வெளியானது. அவரிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட மற்றொருவர் மீது எந்த ஆதாரமும் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து ஆசிப் முசாப்தீனை வீரப்பன்சத்திரம் போலீசில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து 7 பிரிவுகளின் கீழ் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிப் முசாப்தீனை கைது செய்தனர். அவரை ஈரோடு மாவட்ட முதன்மை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோர்ட்டில் ஆஜர்
இந்த வழக்கு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் வீரப்பன்சத்திரம் போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வழக்கு மாற்றம் செய்வது தொடர்பாக தகவல் தெரிவிக்கும் வகையில் ஆசிப் முசாப்தீனை கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஈரோடு கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து வந்தனர். ஈரோடு மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆசிப் முசாப்தீனை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் அவரிடம் விசாரணை நடத்தி, வழக்கு மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்தார். அதன்பிறகு இந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார். இதையடுத்து ஆசிப் முசாப்தீனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.