'போராட்டம் நடத்தாமல் விவசாயத்தை மேற்கொள்ளுங்கள்' விவசாயிகளுக்கு ஐகோர்ட்டு அறிவுரை


போராட்டம் நடத்தாமல் விவசாயத்தை மேற்கொள்ளுங்கள் விவசாயிகளுக்கு ஐகோர்ட்டு அறிவுரை
x

நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் நீதியின் மீது விவசாயிகள் நம்பிக்கை வைக்க வேண்டும். போராட்டம் நடத்தி சிரமப்படாமல் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.

சென்னை,

நாகப்பட்டினம் மாவட்டம் முட்டத்தில் செயல்பட்டுவரும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் பனங்குடி, நரிமணம் மற்றும் கோபுராஜபுரம் கிராமங்களில் இருந்து சுமார் 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கடந்த 2017-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிறுவனத்துக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கே இன்னும் இழப்பீடு வழங்காத நிலையில், விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர் போராட்டம்

இந்த எதிர்ப்புக்கு இடையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்தன. அதையடுத்து அதற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் உரிய இழப்பீடு கோரி நாகூர் அருகே ஒரு மாத காலம் தொடர் போரட்டம் நடத்த அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் விவசாயிகள் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தொடர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார். அதை எதிர்த்து ஐகோர்ட்டில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேல்முறையீடு செய்தார். அதில், ஒரு மாத காலம் தொடர் போரட்டம் நடத்தப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருத்தில்கொள்ளாமல் போராட்டத்துக்கு தனி நீதிபதி அனுமதி அளித்துள்ளதாக கூறியிருந்தார்.

நீதியின் மீது நம்பிக்கை

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, நிலம் அளித்தவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதையடுத்து நீதிபதிகள், 'இழப்பீடு கோரிய வழக்குகளின் முடிவுக்காக காத்திருக்காமல், போராட்டத்தில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இழப்பீடு கோரும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை, போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. நீதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்கு மாறாக, நாள் முழுவதும் பந்தலின் கீழ் அமர்ந்து போராட்டம் நடத்தி சிரமப்படாமல் விவசாயிகள் விவசாய தொழிலை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.


Next Story