சூரிய மின் உற்பத்திக்காக 1,000 பனைகளை வெட்ட ஐகோர்ட்டு அனுமதி


சூரிய மின் உற்பத்திக்காக 1,000 பனைகளை வெட்ட ஐகோர்ட்டு அனுமதி
x

சூரிய மின் உற்பத்திக்காக 1,000 பனைகளை வெட்ட மதுரை ஐகோர்ட்டு அனுமதித்தது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் தங்களுக்கு சொந்தமான ஒரு நிலத்தில் சோலார் பேனல்கள் அமைக்க வசதியாக, அந்த நிலத்தில் இருக்கும் பனைமரங்களை வெட்டி, அகற்றுவதற்கு போலீசார் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தனியார் சோலார் நிறுவனம் ஒன்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி முரளி சங்கர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சூரிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

சோலார் பேனல்கள் மூலம் தடையின்றி மின் உற்பத்தி செய்ய அந்த நிறுவனம் வாங்கியுள்ள நிலத்தில் இருக்கும் பனை மரங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றினர். அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸ் பாதுகாப்பு கேட்டு இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

அனுமதி பெற தேவையில்லை

தனியார் நிலங்களில் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கும், அகற்றுவதற்கும் தடை விதித்து எந்தவொரு சட்டமோ, விதிகளோ அல்லது அரசாணைகளோ பிறப்பிக்கப்படவில்லை. எந்தவிதமான முன் அனுமதியோ அல்லது தடையில்லாச் சான்றிதழோ எந்தவொரு அதிகாரியிடமிருந்தும் பெற வேண்டியதில்லை என்று மூத்த வக்கீல் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே அங்கு பனை மரங்களை அனுமதியின்றி வெட்டுவதாகவும், அவற்றை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடலாடி தாசில்தார் கடிதம் அனுப்பியுள்ளார். அதை கலெக்டர் ஏற்று, கூடுதல் தலைமைச் செயலாளருக்கு பரிந்துரைத்துள்ளார்.

இயற்கையின் கொடை

தனியார் நிலத்தில் உள்ள பனை மரங்களை வெட்டினால் நடவடிக்கை எடுக்கலாமா என மத்திய, மாநில அரசுகள் ஆணை பிறப்பித்து உள்ளதா, சட்டம் இயற்றியுள்ளதா என்பதை ஆராயாமல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருந்தபோதும், சம்பந்தப்பட்ட நிலத்தில் இருந்து ஏற்கனவே 344 பனை மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. ஆயிரத்துக்கும் அதிகமான பனை மரங்கள் வெட்டப்பட உள்ளன. அங்கு புதிய பனை மரக்கன்றுகளை நட உத்தரவிடலாம் என அரசு வக்கீல் தெரிவித்துள்ளார். இதை மனுதாரர் தரப்பினர் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

2 ஆயிரம் கன்றுகள்

எனவே போலீஸ் பாதுகாப்பு கேட்ட சோலார் நிறுவனத்தின் மனுவை ஒரு வாரத்தில் பரிசீலித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சோலார் நிறுவனமானது, 2 ஆயிரம் பனை மரக்கன்றுகளையும், பிற வகையைச் சேர்ந்த ஆயிரம் மரக்கன்றுகளையும் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த மரங்களை தமது துறையினர் மூலமாகவோ, தொண்டு நிறுவனங்களின் மூலமாகவோ வனத்துறை நடவு செய்து பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story