வக்கீலை துன்புறுத்தியதாக போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு -ஐகோர்ட்டு
பொய் வழக்குப் பதிவு செய்து துன்புறுத்தியதாக போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சரவணன் கருப்புசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'அகில இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட இயக்கத்தை நடத்தி வருகிறேன். கடந்த 2008-ம் ஆண்டு சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு எதிராக பல புகார்களை செய்தேன். இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அருண் ஐ.பி.எஸ்., துணை போலீஸ் சூப்பிரண்டு சாம்பசிவம் உள்பட போலீஸ் அதிகாரிகள் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்து அடித்து துன்புறுத்தினர். எனவே என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். என்னை துன்புறுத்திய போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இழப்பீடு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
'மனுதாரர் தன்னை துன்புறுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக கொடுத்த புகாரை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், மனுதாரருக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்கி கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர் என்று கூறப்பட்டது. அதுமட்டுமல்ல, போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிலும் மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபித்துள்ளதாகவும் மனுதாரர் கூறுகிறார்.
நிவாரணம்
எனவே, பொய் வழக்குப் பதிவு செய்து துன்புறுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அமைப்பை (கோர்ட்டை) நாடி மனுதாரர் நிவாரணம் பெறலாம். வழக்கை முடித்துவைக்கிறேன்.'
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.