ரெயில் முன் பாய்ந்து கோர்ட்டு ஊழியர் தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே கோர்ட்டு ஊழியர் குடும்ப பிரச்சினை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் பிணம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கேத்தாண்டப்பட்டி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கிடையே சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மார்க்கத்தில் ஏதோ ஒரு ரெயில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோர்ட்டு ஊழியர்
மேலும் இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நாட்டறம்பள்ளியை அடுத்த தெக்குப்பட்டு ஏ.கே.கே. நகர் பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவரின் மகன் தண்டபாணி (வயது 28) என்பது தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
தண்டபாணி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மனைவிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தண்டபாணி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
இந்தநிலையில் நேற்று காலை வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.