கோடநாடு வழக்கில் தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை -ஐகோர்ட்டு


கோடநாடு வழக்கில் தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை -ஐகோர்ட்டு
x

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி, சனாதனம் என்பதற்கான அர்த்தத்தை எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் தேடிக்கொண்டிருப்பதாகவும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக சிலரது பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இவரது கருத்துகள் சமுதாயத்தில் உள்ள தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில், எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அதில், 'கோடநாடு விவகாரத்தில் என்னைப்பற்றி பேச உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும். இதற்கு முன்பு பேசியதற்காக ரூ.1.10 கோடியை மான நஷ்ட ஈடாக வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

தேர்தல் நேரம்

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், ''கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அதிலும், கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தி.மு.க.தான் ஆட்சியில் உள்ளது. அரசு எந்திரம் அவர்கள் கையில்தான் உள்ளது. ஆனாலும், இந்த வழக்கில் ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராகும்படி எடப்பாடி பழனிசாமிக்கு போலீசார் சம்மன் அனுப்பவில்லை. மனுதாரர் மீது எந்த தவறும் இல்லாததால் தான் அவரை விசாரணைக்கு அழைக்கவில்லை. அப்படியிருந்தும் அரசியல் ரீதியிலான காழ்ப்புணர்ச்சியால் மனுதாரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான குற்றச்சாட்டுகளை உதயநிதி சுமத்தி வருகிறார். உதயநிதியின் 'எக்ஸ்' வலைதளப்பக்கத்தை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். தேர்தல் நேரத்தில் இவ்வாறு அவதூறு பரப்ப தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் மனுதாரருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்'' என்று வாதிடப்பட்டது.

இடைக்கால தடை

இதையடுத்து நீதிபதி, அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், இந்த வழக்கில் உதயநிதிக்கு தடை விதிக்காவிட்டால் மனுதாரருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படுத்தும் என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை புறம் தள்ளிவிட முடியாது.

எனவே, மனுதாரரை கோடநாடு வழக்கில் தொடர்புபடுத்தி மனுதாரருக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசவோ, அறிக்கைகள் வெளியிடவோ கூடாது என இடைக்காலத் தடை விதிக்கிறேன். இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.


Next Story