கார்கள்-பொருட்களை ஜப்தி செய்ய அடுத்தடுத்து வந்த கோர்ட்டு ஊழியர்கள்


கார்கள்-பொருட்களை ஜப்தி செய்ய அடுத்தடுத்து வந்த கோர்ட்டு ஊழியர்கள்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:30 AM IST (Updated: 8 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கார்கள்-பொருட்களை ஜப்தி செய்ய அடுத்தடுத்து கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

கலெக்டர் அலுவலகம்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு, கடந்த 1987-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு செட்டிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் நிலம் கொடுத்து உள்ளனர்.

அதன்படி செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் மனைவி மனோன்மணி (வயது 70), 10 ஏக்கர் நிலத்தை கொடுத்தார். இதற்காக அரசு நிர்ணயித்த நிவாரண தொகை குறைவாக இருந்ததால், கூடுதல் தொகை கேட்டு திண்டுக்கல் முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு ரூ.77 லட்சத்து 9 ஆயிரத்து 664 வழங்கும்படி உத்தரவிட்டது. ஆனால் மனோன்மணிக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.

ஜப்தி உத்தரவு

இதனால் அவர் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட்டு, கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டது. இதில் கலெக்டரின் கார் உள்பட 3 கார்கள், 100 மர மேஜைகள், 150 மர நாற்காலிகள், 115 மின்விசிறிகள் உள்பட மொத்தம் 13 வகையான பொருட்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று காலை 10 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் கார்கள் எதுவும் அலுவலகத்தில் இல்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பொது பிரிவில் இருந்த நாற்காலிகள், மின்விசிறிகளை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.

3-வது முறையாக...

இதையடுத்து ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து கோர்ட்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு, காலஅவகாசம் கேட்டனர்.

இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் எடுத்த நாற்காலிகளை அங்கேயே வைத்துவிட்டு திரும்பி சென்றனர். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகளில், 3-வது முறையாக கலெக்டர் அலுவலகத்தை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சம்பவம்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு ஜப்தி முயற்சி சம்பவமும் நடந்தது. கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பழனிசாமி (வயது 68). இவர் கடந்த 2003-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தின் ஜீப்பில் கொடைக்கானலுக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் காயம் அடைந்தார்.

இதையடுத்து இழப்பீடு கேட்டு திண்டுக்கல் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 810 வழங்கும்படி உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்காததால் பழனிசாமி கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு வாகனத்தை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார்.

அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு நின்ற நிலஅளவைத்துறை உதவி இயக்குனர்அலுவலக ஜீப்பை ஜப்தி செய்வதற்காக கோர்ட்டு ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர்.

பரபரப்பு

இதையறிந்தஅதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி சென்றனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 ஜப்தி நடவடிக்கைக்காக கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story