அம்மணி அம்மன் மடம் இடிப்பு குறித்து ஐகோர்ட்டு குழுவினர் நேரில் விசாரணை
திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடம் இடிப்பு குறித்து ஐகோர்ட்டு குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடம் இடிப்பு குறித்து ஐகோர்ட்டு குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர்.
அம்மணி அம்மன் மடம் இடிப்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் வடக்கு கோபுரம் அருகில் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்தை பா.ஜ.க. நிர்வாகியான வக்கீல் சங்கர் என்பவர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அவர் மடத்தின் இடத்தில் ஆக்கிரமித்து கட்டி இருந்த வீட்டை கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி இந்து சமய அறநிலையத் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினருடன் இணைந்து இடித்து அகற்றினர்.
அந்த சமயத்தில் அம்மணி அம்மன் மடத்தையும் அறநிலையத்துறையினர் இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
மறுநாள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்பட்ட சங்கர் அவரது ஆதரவாளர்களுடன் வந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. நிர்வாகி சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்பட சிலரை கைது செய்தனர்.
ஐகோர்ட்டு குழுவினர் விசாரணை
சங்கர் தரப்பினர் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அம்மணி அம்மன் மடத்தின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு உள்ளதா, மடம் இடிக்கப்பட்டு உள்ளதா, எதற்காக மடம் இடிக்கப்பட்டது, முறையான அனுமதியுடன் இடிக்கப்பட்டதா என்று விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு வழக்கறிஞர் ஒருவர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இந்த குழுவினர் இன்று திருவண்ணாமலைக்கு வந்து அம்மணி அம்மன் மடம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி, மடத்தில் இடிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு அளவீடு செய்து, புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று ஆணையர் குமரேசனிடம் பல்வேறு தகவல்களை சேகரித்தனர். இதுகுறித்து அந்த குழுவினரிடம் கேட்டபோது, ஐகோர்ட்டு உத்தரவின்படி விசாரணை நடத்தப்பட்டது. அதற்கான அறிக்கையை நாளை (வியாழக்கிழமை) கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.
திருப்பதியை போன்று அடிப்படை வசதிகள்
மேலும் அந்த குழுவினரை முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம், நகர முக்கிய பிரமுகர்கள் கார்த்திவேல்மாறன், ஜீவானந்தம், வழக்கறிஞர் அருள்குமரன் உள்ளிட்ட நகர பிரமுகர்கள் சந்தித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் ஸ்ரீதரன் கூறுகையில், அம்மணி அம்மன் மடத்தில் ஆன்மிக காரியங்கள், பூஜைகள் நடைபெறவில்லை. இப்பகுதியில் உள்ளவர்களையும், சிவாச்சாரியார்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
நன்கொடையாளர்களை அழைத்து வந்து அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தரிசனம் காண்பிப்பது போன்ற தவறான செயல்களும், சமூக விரோத செயல்களும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மடத்தை வாடகைக்கு விட்டு பணத்தை வசூலித்தனர். அம்மணி அம்மன் மடம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது.
இந்த மடத்தின் இடத்தில் கார் பார்க்கிங், கழிவறை, பக்தர்கள் தங்கி தரிசனம் செல்வதற்கு உண்டான வசதி போன்றவைகளை திருப்பதியை போன்று அடிப்படை வசதிகள் இங்கு செய்ய வேண்டும் என்ற எங்கள் கருத்தை அவர்களிடம் தெரிவித்து உள்ளோம் என்றார்.
மேலும் பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.