குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு


குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது  மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு
x

கோப்பு படம்

குற்றாலத்தில் 'குளுகுளு' சீசன் தொடங்கியது. மெயின் அருவி ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி,

குற்றாலத்தில் 'குளுகுளு' சீசன் தொடங்கியது. மெயின் அருவி ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். சாரல் மழை விட்டு விட்டு பெய்யும்.

இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள். இந்த ஆண்டு சீசன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. இன்று காலையில் இருந்தே குளிர்ந்த காற்று வீசியது. சாரல் மழையும் விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மாலை தொடர் சாரல் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை சுமார் 6 மணிக்கு குற்றாலம் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதைத் தொடர்ந்து இரவு 7-30 மணிக்கு மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் தொடர்ந்து சாரல் மழை குற்றாலத்திலும் பெய்து சீசன் களை கட்டும் என தெரிகிறது.


Next Story