மக்களை சிரமப்படுத்தும் இடமாக கோர்ட்டுகள் இருக்கக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
மக்களை சிரமப்படுத்தும் இடமாக கோர்ட்டுகள் இருக்கக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை,
மக்களை சிரமப்படுத்தும் இடமாக கோர்ட்டுகள் இருக்கக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களை சிலர் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து, அந்த இடத்தை அவர்களது பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இந்த பகுதியில், பஞ்சாயத்து அலுவலகம், அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் கட்டலாம். எனவே, அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு ஏற்ப ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
காணொலி காட்சி
இந்த மனு நீதிபதிகள் பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரசு அலுவலகம் கட்டுமாறு உத்தரவிட முடியாது. அதற்கு சாத்தியம் உண்டா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், ஆக்கிரமிப்பு செய்ததாக கூறும் நபர்களை காணொலி காட்சி விசாரணைக்கு ஆஜர்படுத்தலாம். இது குறித்து அரசுத்தரப்பு பதில் அளிக்க உத்தரவிடப்படுகிறது என்றும், ஆக்கிரமிப்பாளர்களின் தொலைபேசி எண்களை மனுதாரர் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
சிரமப்படுத்தும் இடமாக...
முன்னதாக, "கோர்ட்டு என்பது அனைத்து மக்களையும் வரவழைத்து நேரில் விசாரணை நடத்தி சிரமப்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது. கூட்டம் சேர்ப்பது கோர்ட்டுகளின் நோக்கமல்ல. வழக்குகளை எந்த அளவுக்கு எளிமையாக நடத்த முடியுமோ, விரைவில் தீர்ப்பு வழங்க முடியுமோ அந்த அடிப்படையில்தான் கோர்ட்டுகள் செயல்படும்" என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.