தம்பதி போல் நடித்து கவரிங் நகையை அடகு வைக்க முயற்சி
ஆம்பூரில் தம்பதி போல் நடித்து கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற வாலிபர் சிக்கினார். தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆம்பூரில் தம்பதி போல் நடித்து கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற வாலிபர் சிக்கினார். தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
அடகு வைக்க வந்தனர்
ஆம்பூர் பஸ் நிலையம் அருகே எம்.சி ரோட்டில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருபவர் ராமமூர்த்தி. இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வந்தனர். அவர்கள் கடை ஊழியரிடம் தாங்கள் கணவன்- மனைவி என்று தெரிவித்தனர். தாங்கள் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்றும் ஆம்பூரில் ஷூ மற்றும் தோல் பொருட்கள் வாங்க வந்ததாகவும் கூறினர்.
மேலும் பொருட்கள் வாங்க பணம் போதாததால் நகையை அடகு வைக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதை நம்பிய கடை ஊழியர்கள், கணவன்- மனைவி என்று கூறியவர்கள் கொடுத்த நகையை எடை போட்டு பார்த்துள்ளனர். பின்னர் அதன் தரத்தை சோதனை செய்துள்ளனர்.
வாலிபர் சிக்கினார்
அப்போது அவர்கள் கொடுத்தது 'கவரிங்' நகை என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கடை ஊழியர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் வந்து, தப்பி ஓடியவர்களை விரட்டிச் சென்றனர். அதில் வாலிபர் மட்டும் சிக்கினார். அந்த பெண் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து ஆம்பூர் டவுன் போலீசில் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்த கவுசிக் பாஷா (வயது 31) என்பதும் அவருடன் மனைவி எனக்கூறிக் கொண்டு வந்த இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த சிம்ரன் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கணவன்- மனைவி போன்று நடித்து கவரிங் நகையை அடகு வைத்து பணம் பெற்று செல்ல வந்ததும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கவுசிக் பாஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.