மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது: பெரியம்மையால் 50 ஆயிரம் மாடுகள் பாதிப்பு-உயிரிழப்பை தடுக்க விவசாயிகள் கோரிக்கை


மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது: பெரியம்மையால் 50 ஆயிரம் மாடுகள் பாதிப்பு-உயிரிழப்பை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் பெரியம்மை நோயால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாடுகள் உயிரிழப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி பெரும்பாலான மக்கள் உள்ளனர். அவர்களில் பலர் விவசாயம் செய்வதுடன், ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சம் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாடுகளை பெரியம்மை நோய் வேகமாக தாக்கி வருகிறது. இதற்காக கால்நடை பராமரிப்பு துறை மூலமாக பெரிய அம்மையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் உள்ளிட்ட சிகிச்சைகள் அளித்த போதிலும் நோய் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

பால் சுரப்பது குறைந்தது

தற்போது மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாடுகளில் பால் சுரப்பது குறைந்துள்ளது. மேலும் மாடுகள் பல இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மாடுகளுக்கு போதிய தடுப்பூசி இல்லை என்றும், அதனால் தனியார் மருத்துவமனைகளில் வாங்கி கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள். அதேபோல நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை என்றும் அவர்கள் வேதனையுடன் கூறினார்கள். இது தொடர்பாக விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

500 மாடுகள் பலி

கிருஷ்ணம்ம கொத்தூரை சேர்ந்த விவசாயி ஜெயராமன்:-

எங்கள் பகுதியில் அதிக அளவில் மாடுகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த நோய் பிற கால்நடைகளுக்கு வேகமாக பரவி வருகிறது. அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் சுமார் 500 மாடுகள் வரை இறந்திருக்கலாம்.

தடுப்பூசி போதிய அளவில் இல்லை. அதிகாரிகளிடம் கூறினால் வந்து பார்க்கிறோம் என கூறுகிறார்கள். யாரும் வருவதில்லை. இதனால் மாடுகளில் பால் சுரப்பது குறைந்துள்ளது. மாடுகளின் உடல் முழுவதும் தடுப்புகள் உள்ளதால், அவை சோர்ந்து படுத்துள்ளன. எனவே நாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை காக்க போதிய தடுப்பூசி செலுத்த வேண்டும்.

எம்.சவுளூரை சேர்ந்த விவசாயிரங்கசாமி:- மாடுகளுக்கு அம்மை நோய் என்று கூறுகிறார்கள். புதிய வகை வைரஸ் என கூறுகிறார்கள். இதனால் மாடுகளை வளர்த்து வரும் எங்களுக்கு மாடுகளை தாக்கி உள்ளது என்ன நோய் என்றே தெரியவில்லை. ஆனால் மாடுகளுக்கு உடல் முழுவதும் கட்டி போல புண்ணாக இருக்கிறது. பால் சுரப்பது குறைந்து விட்டது. மாடுகள் படுத்தே கிடக்கிறது. சில இடங்களில் மாடுகள் இறந்தும் உள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. எனவே கால்நடைகளை காப்பாற்றுவதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும்.

காப்பாற்ற வேண்டும்

தட்டக்கல்லை சேர்ந்தசிவகுரு:- எங்கள் பகுதியில் ஏராளமான மாடுகள் பெரிய அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 4 லட்சம் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. ஆரம்பத்தில் குறைந்த அளவு மாடுகளுக்கு மட்டுமே இந்த நோய் இருந்தது. தற்போது வேகமாக பரவி, 30 சதவீத மாடுகளுக்கு பெரிய அம்மை நோய் உள்ளது. எனவே தடுப்பூசிகளை போதிய அளவில் செலுத்தி மாடுகளை காப்பாற்றவேண்டும்.

தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் அனுமந்தப்பா:-

நான் கால்நடை ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். எனது பணி காலத்தில் இதை போல அதிக அளவிலான மாடுகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டு பார்த்ததில்லை. நிறைய இடங்களில் மாடுகள் அம்மையால் பாதிக்கப்பட்டு எழுந்திருக்க முடியாமல் படுத்தே கிடக்கிறது. மேலும் நிறைய இடங்களில் மாடுகள் இறந்து விட்டன. மலை கிராமங்களில் அதிகமாக இறந்துள்ளன.

போதிய மருந்துகளை கொடுத்தால் மாடுகளை காப்பாற்றலாம். பல இடங்களில் மருந்து தட்டுப்பாடு உள்ளது. நானே தினமும் 10-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று மாடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன்.

இவ்வாறு அவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மாடுகளை வேகமாக தாக்கி வரும் பெரிய அம்மை நோயில் இருந்து, அவற்றை காப்பாற்ற வேண்டும். மேலும் போதிய தடுப்பூசிகளை கால்நடை துறை சார்பில் வழங்கி, சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


Next Story