நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டம்


நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டம்
x

ஒரு நாள் முழுவதும் பசுவிடமிருந்து பாலைக் கறக்காமல் கன்றுக்கு மட்டும் கொடுத்து நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

திருப்பூர்

ஒரு நாள் முழுவதும் பசுவிடமிருந்து பாலைக் கறக்காமல் கன்றுக்கு மட்டும் கொடுத்து நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

உரிய விலை

இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயிகள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அந்த முதுகெலும்பு படிப்படியாக நொறுங்கி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயத்துக்கென பல ஆயிரம் கோடிகளை மத்திய மாநில அரசுகள் ஒதுக்கி வருகின்றன. ஆனால் அரசின் திட்டங்கள் பலவும் விவசாயிகளுக்கு முழுமையாக சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் உள்ளது.

அதேநேரத்தில் இடுபொருட்கள் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் வேதனையாக உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

'விவசாயம் சார்ந்த உப தொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காத போது கால்நடை வளர்ப்பு கைகொடுக்கும். ஆனால் சமீப காலங்களாக கால்நடை வளர்ப்பிலும் வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டம்

மாடுகளுக்கான உலர் தீவனம், அடர் தீவனம் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. ஆனால் பால் விலை உயர்த்துவதில் அலட்சியம் காட்டப்படுகிறது. பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும். கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் என பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனாலும் பயனில்லாத நிலையே உள்ளது. எனவே அரசுத்துறைகளைப் போல ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி ஒரு நாள் மட்டும் விவசாயிகளின் கறவை மாட்டுப் பாலை கன்றுகளுக்கும், சொந்தப் பயன்பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் விவசாயிகளின் அருமை மற்றவர்களுக்குத் தெரியும். இந்த போராட்டம் பல நாட்கள் தொடர்ந்தால் என்ன ஆகும் என்பதை உணர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார்கள்'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நூதன போராட்டத்துக்காக தற்போது உடுமலை பகுதி விவசாயிகள் சமூக வலைத்தளங்களின் மூலம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதேநேரத்தில் இந்த போராட்டத்துக்கு விவசாயிகள் தரப்பில் ஆதரவு இருந்தாலும், இந்த போராட்டம் சாத்தியமில்லை என்ற கருத்தும் விவசாயிகளிடையே எழுந்து வருகிறது.


Related Tags :
Next Story